Pages

Thursday, August 5, 2010

சிந்து பைரவி -- என் பார்வையில்..


சுபம்!, நன்றி, மீண்டும் வருக!!, என்று கார்டு போட்டு படத்தை முடிக்காமல், தொடராக அதை விட்டுவிடுவது ஒரு வகையான திரையுக்தி. அந்த யுக்தியை வியாபாரம் அல்லது ஒரு பரபரப்பிற்காக செய்யலாம். இரண்டாம் பாகம் எடுக்கலாமே என்று (உ.ம் : ஆயிரத்தில் ஒருவன்); அல்லது வார்த்தயில் மட்டும் வரும் (உ.ம்: அந்நியன் ஆட்டம் தொடரும், சிங்கம் வேட்டை தொடரும், சாமியின் சாங்கியம் தொடரும்....). ஆனால் ஒரு கதையின் ஓட்டத்திற்கு அப்படிப்பட்ட திரைக்கதையை அவசியப்படுத்தி அதை ஆட்படுத்தியவர் திரு. கே.பி. அவர்கள். அடிதடி ஆக்‌ஷன் படத்திற்குத்தான் அது அவசியம் என்றில்லாமல் குடும்ப படத்திற்கும் அது மிகவும் பொருந்தும் என்று அப்படி அதை நிருபித்த படம் சிந்து பைரவி (குடும்ப சண்டையை விட வேற சுவாரஸியமான ஆக்‌ஷன் எது இருக்க முடியும்னு அவர் யோசிச்சுருக்கலாம்).

சாஸ்திரிய சங்கீதத்தை தூக்கி பிடிக்கும் கெத்தான வித்வான் ஜே.கே.பி. இசைக்கும் அவளுக்கும் சம்பந்தமே இல்லாத “ஞான்சூன்யமாக  மனைவி பைரவி. சங்கீதம்னா அது எல்லாம் தான் என்ற கொள்கையுடைய, ஜே.கே.பி யின் பரம விசிறியாக சிந்து. இந்த மூவருக்கிடயே நிகழும் ஒரு உறவுப் போராட்டத்தை கதையாக எடுத்துக்கொண்டு, இசை என்ற வடிவத்தையே அதற்கு திரைக்கதையாக கொடுத்திருப்பார் இயக்குனர்.

 “பாடறியேன்.. படிப்பறியேன்.. என்று சிந்து துவங்கும் போது விறைப்பாக உட்கார்ந்திருக்கும் ஜே.கே.பி கண்னெதிரேயே டங்கென்று குருமூர்த்தி வாசிக்கும் மிருதங்க ஒலி, தமிழிசையை மட்டம் தட்டுபவருக்கு வைக்கும் குட்டு போலவே தோன்றும். “மரி மரி நின்னெ..என்று முடிக்கும் போது அரங்கமே அதிரும்போது மனதில் ஒருபுறம் கே.பி யும், மறுபுறம் இசைஞானியும் சம்மனம் போட்டு அமர்கிறார்கள்.

சரிதான்.. போட்டி ஆரம்பிச்சுடுத்து.. என்று நினைக்கும் போது, ஜே.கே.பி சிந்து நட்பு முளை விட்டு, இசையாக பூத்து, காதலாக காய்த்து, உறவில் கனியாகும் நிலைவரும் போது பெரிய கலைஞன் என்ற நிலையிலிருந்து கீழிறங்கி, மிகச் சாதாரணமான மனிதனாக, வாய்ப்பு கிடைத்தால் பயன்படுத்திக்கொள்ளும் சந்தர்ப்பவாதியாக தெரிகிறான் நாயகன்.

பைரவியின் அழுகாச்சிகள், உடல் உருளல் (அங்கப்பிரதட்சணம் தான்), விரதங்கள், சிந்துவை கரித்துக் கொட்டுதல் என்று சென்டிமெண்டாக நகர்வது கனம். அண்ணி.. நான் பொய் சொல்றத நிறுத்திட்டேன்; அண்ணா ஆரம்பிச்சிருக்கார்“ என்று ஜே.கே.பி யின் சிந்து மோகத்தை பைரவிக்கு வெளிப்படுத்துகிறான் கஜபதி. “இதுதானே என்னையும் அவரையும் பிரித்து அவள் பக்கம் அவரை சாயவைத்தது என்பதற்காக, குருமூர்த்தியிடம் இசை  கற்றுக்கொள்வதும், ச..ரி. க.. ம.. படிப்பத்ற்குள்ளேயே, “மழை வர்ர மாதிரி இருக்குல்ல.. துணி எடுத்துட்டு வந்துடறேன்என்று சதாரண குடும்பத்தலைவியாக மாறுவதும்  பைரவியின் அசாதாரணமான பரிமளிப்பு.

படத்தின் திருப்புமுனையாக அமைவது பைரவிக்கு குழந்தை பாக்கியம் இல்லவே இல்லாமல் போவதும், சிந்துவிற்கு திருமணம் பாக்கியம் இல்லாமலே ஜே.கே.பி மூலம் குழந்தை உண்டாவதும் தான் (அத வச்சுத்தானே சிந்து பைரவி- 2 நெடுந்தொடரே வந்தது). அது முதல், சிந்து ஜே.கே,பி யிடமிருந்து விலக தண்ணி தொட்டி தேடிய கன்னுகுட்டியாகிறான்; மோகனம் படும் வேளையிலும் சிந்துவின் ராகத்தை பாடுகிறான் ஜே.கே.பி. குடிக்க காசு இல்லாமல் திண்டாடும்போது, தாத்தாவின் பென்ஷன் பணத்தையே ஆட்டையை போட, தாத்தா மண்டையையே போடுகிறார். இப்படியாக நாயகன் குடியாலும், சிந்துவின் நினைவாலும் சீர்கெட்டு  அலையும்போதும், சங்கீதத்தில் இன்னமும் அவனுக்கு இணையில்லை என்பதற்கு சாட்சியாக “ஏண்டா.. பட்டு ஜிப்பாவும், மேடையில இடமும் கிடைச்சுட்டா, நீ பெரிய வித்துவானோ?என்று கூறி தப்பாக பாடும் தேங்காய் மூடி பாகவதரை விளாசுவது, The Real KB Touch.

குழந்தை பெற்று, அதையே தன் ஜே,கே,பி க்கு பரிசாக அக்கா.. இது உங்க குழந்தை, உங்ககிட்ட தான் வளரனும்என்று பைரவியிடம் கொடுத்துவிட்டு அவர்களிடமிருந்து நிரந்தரமாக பிரிந்து செல்வது, சிந்து characterஐ சிகரத்தில் வைக்கிறது. இந்த கதையை 20 வருடங்கள் கழித்து மீண்டும் தொடரலாம் என்று இயக்குனர் அன்று நினைத்தாரோ, இல்லையோ.. ஆனால் அதற்க்கேற்றார் போல் கிளைமாக்ஸை அமைத்து (தற்செயலாக) திரைக்கதையில் ஒரு புதுமையை புகுத்தினார் கே பாலசந்தர்.

நான் ரசித்த யதார்த்த தமிழ் சினிமாவில் ஒரு மைல்கல் சிந்து பைரவி!!

Monday, August 2, 2010

கோபல்ல கிராமம்.



கோபல்ல கிராமம் -- கரிசல் பூமி தோன்றிய கதை

சற்றேறக்குறைய கட்டபொம்மனின் காலத்தில் புலம் பெயர்ந்த (ஆந்திராவிலிருந்து தமிழகம் வந்தமர்ந்த) கம்மாள மக்களின் வாழ்க்கை முறை, சொல்வழக்கு ஆகியவைகளை FLASHBACK முறையில் நகர்த்தும் கதை.

புலம் பெயர்ந்ததற்க்கான காரணம், அப்படி வருகயில் அவர்கள் அனுபவித்த இன்னல்கள் ஆகியவற்றை ஒரு திரைக்கதை பாணியில் சொல்கிறார். ம்னிதனுக்கு மீறிய சக்தியின் அற்புதத்தை கூறுகையில், கிராமத்து மனிதர்களின் நம்பிக்கை வெளிப்படுகிறது.

இடம் பெயர்ந்த ஒரு கூட்டம், காடாக உள்ள ஒரு இடத்தை தீயிட்டு கொளுத்தி கரிசல் நிலமாக மாற்றுவது, அதற்கு அனுபவமுள்ள பெண்களின் பங்களிப்பு, கூட்டு வாழ்க்கயின் தத்துவம், கால்நடைகளின் மேல் கொள்ளும் அன்பு, மனிதரிடத்தில் கொள்ளும் மாண்பு என்று கரிசல் கிராம மக்களின் வாழ்வை கண் முன்னே நிறுத்தி ராஜபாட்டை நடத்தியுள்ளார் கி. ராஜநாராயணன்.
அந்த கிராமத்தின் நபர் ஒவ்வொருவரின் பெயரை கூறி அதற்கு ஒரு கதையும் கூறுவது வெள்ளந்தியின் உச்சம்.

இப்படி படிக்கும் இருநூற்று சொச்ச வெள்ளைப் பக்கங்களும் கருப்பு பூமி மக்களின் காவியமாக காட்சி படுத்துகிறது கோபல்ல கிராமம்.

Saturday, July 31, 2010

நாளை காலை -- மாமல்லை பயணம்...